எரியும் எண்ணங்கள்!

Friday 3 June 2011

மனித நேயம்

வாழ்விழந்து பரிதவிக்கும் ஏழை மக்கள்
     வயிற்றுக்குக் கூழின்றி வெந்து மாள,
தாழ்வின்றித் தலைவர்கள் மகிழ்வுந் தேறி
    தரணியிலே உலவுகிறார் தருக்க ராக!!!
ஊழ்வலியின் விளைவென்று வெம்பி டாதீர்!
     ஊறுகின்ற எறும்பதனால் உரலும் தேயும்!!
வீழாது மக்களினம் வாழ வேண்டில்,
     விதைத்திடுவோம் நம்நெஞ்சில்  மனித நேயம்!!!

மனைகவர்ந்தோன் தம்பியையும் மாட்சி யோடு,
     மன்னித்துத் தன்தம்பி யென்றான் ராமன்!!!
வினையாலே மகன்பெற்ற வலியைக் கூட,
     விதிமாற்றி உயிர்காத்தார் பாபர் என்பார்!!!
சுனையாக அன்பினையே பொழிந்த மாந்தர்,
     சுகமாக வாழ்ந்திட்ட புனித மண்ணில்,
பனைசாய்ந்து கிடப்பதைப்போல் பிணங்கள் யாண்டும்,
     கிடப்பதையே காணுங்கால் குருதி கண்ணில்!!!

ஆரியமும் த்ராவிடமும் அனைத்தும் சொல்லி
     ஆயிரமாய் மனிதரிடை பிளவு செய்வார்!!!
காரியங்கள் ஆவதற்கே கழகம் கூட்டி,
     காற்றினிலே கொள்கைகளை பறக்கச் செய்வார்!!!
நாரியரின் நலம்பற்றி எழுதி வைப்பார்!
     நடைமுறையில் ஒழுங்கின்றி இன்பம் துய்ப்பார்!!!
சூரியனாய்க் குடியரசு சுடர வேண்டில்,
     சுதந்திரமாய் மக்களன்பு மலர வேண்டும்!!!


மட்டைப்பந்து ஆட்டங்கள் அனைத்தும் கண்டு,
     மானாட மயிலாட நாமும் ஆடி,
பட்டாடை பதாகையெல்லாம் பாங்காய்க் கொண்டு,
     பாசாங்கு நடிகர்கள் தாளில் கொட்டி,
எட்டாத கனியென்று வாழ்வை யெண்ணி
     எச்சிலுக்கே வாக்கெடுப்பை விற்று நிற்கும்,
கொட்டாவி அரசியலை மாற்ற வேண்டில்,
     கொண்டுவரத் தேவையிங்கு மனித நேயம்!!!

பாவகை : எண்சீர் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்!!!!

No comments:

Post a Comment